இந்தி மார்க்கெட்டுக்காக தக் லைஃப், கூலி புதிய திட்டம்?

இந்தி மார்க்கெட்டுக்காக தக் லைஃப், கூலி புதிய திட்டம்?
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’, ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ ஆகிய படங்கள் இந்தி மார்க்கெட்டை குறிவைத்து புதிய ஒப்பந்தத்தில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் பிவிஆர்- ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள், தென்னிந்தியாவில் இருந்து பான் - இந்தியா முறையில் வெளியாகும் படங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதில் ஒன்று, திரையரங்கில் படம் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பது. இதை
ஏற்றுக்கொண்டால் மட்டுமே வட இந்தியாவில் அதிக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை வைத்திருக்கிற இந்நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட படங்களின் இந்திப் பதிப்பை திரையிடும். அப்படித்தான் ‘புஷ்பா’ உள்பட சில படங்கள் அங்கு வெளியாகின.

தமிழில் உருவான பல பெரிய பட்ஜெட் படங்கள் 4 வாரங்களில் ஓடிடி-தளங்களில் வெளியிடுவதற்கான ஒப்பந்தங்களைப் பின்பற்றுவதால், அந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாவதில்லை. தமிழில் வசூல் அள்ளிய கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களின் இந்தி பதிப்புகள் அங்கு வெளியாகவில்லை. இதனாலே தமிழ்ப் படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்குள் செல்லவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படங்கள் மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ளன. இந்தப் படங்களில் இந்தி நடிகர்களும் நடித்துள்ளதால் வட இந்தியாவில் எதிர்பார்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால் இந்தப் படங்களை 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் இதையடுத்து இந்தப் படங்களின் இந்திப் பதிப்பை பிவிஆர் -ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாகப் படக்குழு ஏதும் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in