Published : 10 May 2025 04:28 PM
Last Updated : 10 May 2025 04:28 PM
‘ஒரு நொடி’ படக்குழுவினரின் அடுத்த படமான ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் தொடங்கினார்கள். இதன் படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஹாரர் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த தலைப்பை மாலை 6 மணி, 6 நிமிடங்கள், 6 நொடிக்கு வெளியிட்டார்கள். இப்படம் குறித்து இயக்குநர் பி.மணிவர்மன், “முந்தைய ‘ஜென்ம நட்சத்திரம்’ போன்றே இந்தப் படமும் பேசும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பு அதன் நிஜ ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம்.
இந்தப் படத்தை பார்க்கும்போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக கே.ஜி, இசையமைப்பாளராக சஞ்சய் மாணிக்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தினை உலகமெங்கும் வெளியிடும் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருக்கிறார். இவர் சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கோட்’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தினை தமிழகத்தில் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT