ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான காப்புரிமை மீறல் வழக்கின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப்படம்
ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பாடல் காப்புரிமை வழக்கின் இடைக்கால உத்தரவுக்கு டெல்லி உயர் நீதின்றம் தடை விதித்துள்ளது. எனினும், தனி நீதிபதியின் உத்தரவின்படி 10 நாட்களுக்குள் ரூ.2 கோடியை நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் தயாரிப்பாளர்களும் கட்டவேண்டும் என்று நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்பால் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிஃபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்‌ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். அதில், "வீர ராஜ வீரா பாடல் ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டதாக இல்லை. ஆனால் உண்மையில், அதன் உள்ளீடு, உணர்வுகள் மற்றும் பாடல் கேட்கும்போது ஏற்படும் தாக்கத்தில் சிவ ஸ்துதியை ஒத்துள்ளது. பாடலில் வேறு சில கூறுகளை சேர்ப்பது, பாடலை ஒரு நவீன இசையமைப்பைப் போல மாற்றி இருக்கலாம். ஆனால், அடிப்படை இசையமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அசல் இசையமைப்பாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும்.

எனவே ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.2 கோடி அபராத தொகையாக டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார். மேலும், ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் வீர ராஜ வீரா பாடலில் நசீர் பயாசுதின் தாகர் மற்றும் ஜாஹிரூதீன் தாகர் உருவாக்கத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கிரெடிட் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த இடைக்காலத் தீர்ப்பினை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. எனினும், தனி நீதிபதியின் உத்தரவின்படி 10 நாட்களுக்குள் ரூ.2 கோடியை நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் தயாரிப்பாளர்கள் கட்டவேண்டும் என்று நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்பால் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in