''கவுதம் மேனனை இப்படி செய்து விட்டீர்களே!'' - சிம்பு பேச்சு

''கவுதம் மேனனை இப்படி செய்து விட்டீர்களே!'' - சிம்பு பேச்சு
Updated on
2 min read

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் எங்கள் இயக்குநர் கவுதம் மேனனை இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்று சிம்பு கூறினார்.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொண்டார்.

இந்த விழாவில் சிம்பு பேசும்போது, “‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. சந்தானம் உடல் அசைவுகள், டைமிங் காமெடி எல்லாமே ரொம்ப சூப்பராக இருந்தது. அவருடைய நண்பர் ஆர்யா தயாரித்திருக்கிறார்.

நண்பர்கள் படம் பண்ணும போது அற்புதமாகவே வரும். ஆர்யாவுக்கு கண்டிப்பாக இது வெற்றிப் படமாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ‘மன்மதன்’ தொடங்கி இப்போது வரை சந்தானத்தின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படத்தில் எங்கள் இயக்குநர் கவுதம் மேனனை இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உங்களை சும்மா விடமாட்டேன்.

நான் எங்கு சென்றாலும், பலரும் என்னிடம் நீங்கள் பலபேரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள், உதவி செய்திருக்கிறீர்கள். ஆனால் சந்தானம் ஒருத்தர் மட்டுமே உங்களைப் பற்றி அனைத்து இடங்களிலும் பேசிக் கொண்டே இருக்கிறார் என்பார்கள். அதற்கு அது அவருடைய கேரக்டர், அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பேன்.

அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஒருவருக்கு நல்லது செய்யலாம், உதவி செய்யலாம். எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள். எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டு யாருக்கும் எந்தவொரு உதவியும் செய்யாதீர்கள். ஏனென்றால் ஒரு சிலர் நாம் செய்த உதவியை மறக்காமல் மரியாதை வைத்திருப்பார்கள். நிறைய பேர் அந்த உதவியை மதிக்காமல் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு உதவி செய்ய பிடிக்கும், உதவி செய்வேன் அவ்வளவு தான்.

இப்படி சந்தானம் பழைய விஷயங்கள் மறக்காமல் இருப்பதால்தான் இன்று வரை அவருடைய டீம் கூடவே இருக்கிறார்கள். அதனால் இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார். அடுத்து இருவரும் ‘எஸ்டிஆர்49’ படத்தில் இணைந்து நடிக்கிறோம். இன்று சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது, ரொம்ப சீரியஸான படங்கள் எடுக்க தொடங்கிவிட்டோம். பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படங்களாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஜாலியான ஃபீல்குட்டான படங்களும் வரவேண்டும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்தேன். ரொம்ப அற்புதமான படம். அப்படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். அப்படியான படங்களுக்கு சந்தானம் மாதிரியான ஆளை ரொம்பவே மிஸ் பண்றோம். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி அவருக்கு பிடித்த ஹீரோக்கள், இயக்குநர்கள் ஆகியோருடன் இணைந்து காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என சந்தானத்திடம் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான ஒரு ஆரம்பம் தான் ‘எஸ்டிஆர் 49’” என்று பேசினார் சிம்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in