‘குட் பேட் அக்லி’, ‘ரெட்ரோ’ படத் தலைப்புகள்: கே.ராஜன் கடும் அதிருப்தி

‘குட் பேட் அக்லி’, ‘ரெட்ரோ’ படத் தலைப்புகள்: கே.ராஜன் கடும் அதிருப்தி

Published on

தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது என்று ‘அகமொழி விழிகள்’ விழாவில் கே.ராஜன் பேசினார்.

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘அகமொழி விழிகள்’. மே 9-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை சசீந்திரா கே.சங்கர் இயக்கி இருக்கிறார். இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள் சிலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கே.ராஜன் பேசும்போது, “கேரளா நண்பர்கள் இந்தப் பட விழாவுக்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத்தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். ட்ரெய்லர், மூன்று பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துகள்.

இந்த வருடம் வெறும் 4 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. போன வருடம் 220 படங்களில் 8 படங்கள் தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படங்கள் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும்தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன், நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும்.

‘அகமொழி விழிகள்’ என்ன அழகான டைட்டில். அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார். ஆனால் இயக்குநர் யாரோ ‘குட் பேட் அக்லி’ என டைட்டில் வைத்துவிட்டார். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ‘ரெட்ரோ’ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டன. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார். தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை” என்று பேசினார் கே.ராஜன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in