திரை விமர்சனம்: வல்லமை

திரை விமர்சனம்: வல்லமை
Updated on
1 min read

தாயை இழந்துவிட்ட 14 வயது மகளின் கல்விக்காக சென்னையில் குடியேறுகிறார் கிராமத்து மனிதரான சரவணன் (பிரேம்ஜி). சுவரொட்டித் தொழிலாளியாக உழைத்து, மகளைக் கண்ணும் கருத்துமாகப் படிக்க வைக்கிறார். ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மகள், திடீர் உடல்நலக் குறைவுக்கு ஆளாக, பதறியடித்து மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். பரிசோதனையில் அவளுக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துச் சொல்கிறார் மருத்துவர். இதைக் கேட்டுமனம் குமையும் மகளும் தந்தையும், பாலியல் குற்றவாளி யாரெனக் கண்டுபிடித்து பழிதீர்க்க முடிவெடுக்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா என்பது கதை.

ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்தாலும் மானத்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் சாமானிய மனிதர்களின் கோபத்துக்கு நியாயமும் வலிமையும் உண்டு என்கிற கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பழிவாங்கும் திரைக்கதை, தங்குதடையில்லாமல் பயணிக்கிறது. குற்றம் எப்போது, எந்தச் சூழ்நிலையில் நடந்தது, குற்றவாளி யார்என்பதைக் கண்டறியத் தந்தையும் மகளும் எடுக்கும் முயற்சிகள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்த பிறகு, அவரை நெருங்கும் காட்சிகளின் படமாக்கமும் கிளைமாக்ஸும் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுக்கின்றன.

ஒரு சிறுமி தனக்கு நேர்ந்த வன்கொடுமைக்குப் பதிலடியாகக் கொலை செய்யத் துணிவாள் என்பது ஏற்கும்படியாக இல்லை. என்றாலும் அவள் தனது குமுறலை வெளிப்படுத்தும் விதம், அந்தக் கொடியவன் தண்டிக்கப்பட வேண்டியவன் தான் என்பதைப் பார்வையாளர்களுக்கு நச்சென்று உணர்த்தி விடுகிறது. படிப்பில் சுட்டியாகவும் நடனத்தில் ஈடுபாடும் கொண்ட பூமிகாவாக நடித்திருக்கும் திவ்யதர்ஷினி, அற்புதமான முகபாவங்கள் வழியாக இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். மகளின் மனநிலையை அவளுடைய மன, உடல்வலியைப் புரிந்துகொள்ளும் பாசமானஅப்பாவாக பிரேம்ஜி பொருந்தி யிருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசன உச்சரிப்பில் சுத்தமாகக் கவனம் செலுத்தாத அவரின் உடல்மொழி அந்தக் குறையை ஈடுசெய்கிறது.

கண்டிப்பான காவல் ஆய்வாளர் ‘வழக்கு எண்’ முத்துராமன், கண்ணியமான காவலர் சூப்பர் குட் சுப்பிரமணி, தொழிலதிபர் சி.ஆர். ரஜித், அவருடைய கார் ஓட்டுநர் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞன் விது, அலுவலக உதவியாளர் திலீபன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சாமானியர்களின் கோபத்துக்கு மலையை சாய்க்கும் வலிமை உண்டு என்பதை, இந்த ‘வல்லமை’ நிதானமானக் காட்சிகளின் வழியாக விரித்து வைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in