Published : 26 Apr 2025 06:43 PM
Last Updated : 26 Apr 2025 06:43 PM
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை உலகத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த ‘காவல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நாகேந்திரன் அறிமுகமானார். கடந்த 2015-ல் இந்தப் படம் வெளியாகி இருந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடிகராகவும் நாகேந்திரன் நடித்துள்ளார். கடந்த மாதம் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இந்நிலையில், மீண்டும் ஓர் இயக்குநரின் மரணம் தமிழ் சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
நாகேந்திரன் மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “அன்பு நண்பர் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப் போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்யக் காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. சகோதரனாய், நெருங்கிய நண்பனாய் பபணித்தவரை சட்டென்று இழந்துபோனதில் நெஞ்சம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இவ்வதிர்ச்சியைத் தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும்” என தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT