“தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!” - நானி

“தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!” - நானி
Updated on
2 min read

தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ‘ஹிட் 3’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்தார். நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் நானி பேசும்போது, “நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமாதான் எனச் சொல்லி இருக்கிறேன்.

2012-13-ம் ஆண்டில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு, தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஹிட்’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். ‘ஹிட் -தி தேர்ட் கேஸ்’ ஒரு படம் அல்ல; அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு.

முதல் இரண்டு படத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஹிட் 1’, ‘ஹிட் 2’ படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால், படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது.

ஏனைய இரண்டு பாகங்களை விட ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல, இப்படத்தில் இடம்பிடித்திருக்கும் சில விஷயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நான் நடிக்கும் படத்துக்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள், கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள்.‌ அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.

இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விஷயங்களும் உயர் தரம் கொண்டவை. அந்த வகையில் இந்தப் படம் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னர். அதேசமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள்.

இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று 'ஹிட்', 'ரெட்ரோ' என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார் நானி.

‘ஹிட் 3’ படத்தின் தமிழக விநியோக உரிமையினை சினிமாக்காரன் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in