திரை விமர்சனம்: கேங்கர்ஸ்

திரை விமர்சனம்: கேங்கர்ஸ்
Updated on
1 min read

அரசன் கோட்டை என்ற ஊரில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா), மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதியஉடற்கல்வி ஆசிரியராகப் பணியில் இணைகிறார் சரவணன் (சுந்தர்.சி). இவருடன் சுஜிதாவும் மற்றொரு உடற்கல்வி ஆசிரியரான சிங்காரமும் (வடிவேலும்) நட்புக் கூட்டணி அமைக்கின்றனர். இவர்களால், காணாமல் போன மாணவியின் நிலையைக் கண்டறியமுடிந்ததா? உண்மையில் சரவணன் யார்? பள்ளியைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் உள்ளூர் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் எனப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது கதை.

வில்லன்கள், உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்களின் நிழலுலகச் சாம்ராஜ்ஜியத்துக்குள் துணிந்து கேள்வி கேட்கும் கதாநாயகிக்கு ஆபத்து ஏற்படும்போது, உள்ளே நுழைகிறார் கதாநாயகன். தன் முக அடையாளத்தை மறைத்துக்கொண்டு நாயகியை ஒவ்வொரு முறையும் அவர் காப்பாற்றுகிறார். அப்போதெல்லாம் தானே காப்பாற்றியதாகப் பெயரைத் தட்டிக்கொண்டுபோகும் சிங்காரம், பிறகு வில்லன் கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு படும்பாடுகள் படம் முழுவதும் சரவெடி நகைச்சுவை. பலவிதமான ஆடைகளில் வந்து, சுந்தர்.சி - கேத்ரின் தெரசா - பகவதி பெருமாள் ஆகியோருடன் கூட்டணி வைத்து வடிவேலு ஆடியிருக்கும், நான் - ஸ்டாப் நகைச்சுவை ஆட்டம் கடைசி வரை ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.

இரண்டாம் பாதியில் வில்லன்களிடம் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க, நாயகன் தனது குழுவுடன் திட்டமிட்டு அரங்கேற்றும் ‘மணி ஹெய்ஸ்ட்’ சாயல் கொண்ட ‘ஆபரேஷன் மதகஜராஜா’, முதல் பாதியில் ஆங்காங்கே விழுந்த தொய்வை ஈடுகட்டுகிறது. சுஜிதாவாக வரும் கேத்ரின் தெரசா, தனது கதாபாத்திரத்தின் தொடர்ச்சியையும் நடனமாடக் கிடைத்த வாய்ப்பையும் நன்றாகவேப் பயன்படுத்தி இருக்கிறார்.

பொதுவாக சுந்தர்.சியின் திரைக்கதைகளில் மலிந்திருக்கும் லாஜிக் ஓட்டைகளும் மீறல்களும் அவரின் கலர்ஃபுல் மேக்கிங் மற்றும் திடீர் திருப்பங்களால் மறக்கடிக்கப்படும். இதிலும் அவை மலிந்திருந்தாலும் வடிவேலு பிராண்ட் நகைச்சுவை, கதையோட்டத்துடன் கச்சிதமாக இணைந்து ஜாலம் செய்வதில் திரையரங்கம் சிரிப்பலையால் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. சுந்தர்.சியின் மனைவியாக வரும் வாணி போஜன் சில காட்சிகள் வந்தாலும் நிறைவு.

ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த ராஜசேகர், அதகளம் செய்திருக்கிறார். லாக்கர் காட்சிகளில் கலை இயக்குநர் குருராஜ் தனது குழுவின் முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார். சி.சத்யாவின் இசை ஓகே ரகம். லாஜிக் பற்றி யோசிக்காமல் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு விருந்தைப் படைத்திருக்கிறார்கள் இந்த ‘கேங்கர்ஸ்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in