

‘பொன்.மாணிக்கவேல்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் முகில் விளக்கமளித்திருக்கிறார்.
‘யங் மங் சங்’, ‘லக்ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா நடித்துவரும் படத்துக்கு ’பொன் மாணிக்கவேல்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதில் முதல் முறையாக காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார் பிரபுதேவா.
நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் இப்படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த முகில் இயக்கி வருகிறார். ஜபக் மூவிஸ் தயாரித்து வருகிறது. இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் முகில் கூறியிருப்பதாவது:
பொன்.மாணிக்கவேல் என்ற காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். கடமை தவறாத ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம், அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
யதார்த்தமான ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையும், சமகாலத்தில் நிகழ்ந்த முக்கியமான குற்றச்சம்பவம் ஒன்றைப் பற்றியும் கூறியிருக்கிறேன். முழுக்க சென்னையில் நடைபெறும் கதை இது. இக்கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்திருப்பதாக பிரபுதேவா தெரிவித்தார். தினமும் ஜிம்முக்கு சென்று காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்கு தயார்படுத்திக் கொண்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
போலீஸ் கதை என்பதால், ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘பொன் மாணிக்கவேல்’ உருவாகி வருகிறது. மொத்தம் 5 சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.