டென் ஹவர்ஸ்: திரை விமர்சனம்

டென் ஹவர்ஸ்: திரை விமர்சனம்
Updated on
2 min read

ஆத்தூரில் இளம் பெண் காணாமல் போகும் புகாரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்) களத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்வதாகப் புகார் வருகிறது. அந்தப் பேருந்தை மடக்கும்போது பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பயணியைக் கொன்றது யார்? டார்ச்சருக்கு உள்ளான பெண் யார்?, காணாமல் போன பெண் என்ன ஆனார்? இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பதை 10 மணி நேரத்தில் துப்பு துலக்குவதுதான் படத்தின் கதை.

ஓர் இரவில் நடக்கும் மர்மக் கதைகளைத் தாங்கி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஓர் இரவில், 10 மணி நேரத்தில் நடக்கும் த்ரில்லர் க்ரைம்தான். விடிந்தால் சபரிமலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் நாயகன், ஓர் இரவில் நடக்கும் குற்றங்களைத் துப்பறிகிறார். இளம் பெண் கடத்தப்பட்டதற்கும், பயணியின் கொலைக்கும் உள்ள தொடர்பை சுவாரஸியமாகப் படமாக்க இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் முயற்சி செய்திருக்கிறார்.

துப்பறியும் காட்சிகளில் புதுமை இல்லாவிட்டாலும், யார் கொலை செய்திருப்பார் என்று கேள்வி எழும் வகையில் திரைக்கதையை நகர்த்தியிருப்பது சபாஷ் போட வைக்கிறது. இளம் பெண் காணாமல் போவதும், அதைப் பற்றித் துப்பறியும்போது நடக்கும் சம்பவங்களும் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஆனால், ஆம்னி பேருந்தில் நடக்கும் பயணியின் கொலைக்குப் பிறகு திரைக்கதை அதையொட்டியே பயணிக்கிறது.

இளம் பெண் கடத்தல் என்ன ஆனது என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது. சலிப்பு தட்டிவிடக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து திருப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தொடக்க திருப்பக் காட்சிகள் சுவராஸியத்தைக் கூட்டினாலும், அடுத்தடுத்த காட்சிகள் சோதிக்க வைத்துவிடுகின்றன. பேருந்தில் கொலை நடக்கிறது என்றால், அதில் இருப்பவர்கள் மீதுதான் சந்தேகம் வரவேண்டும். அப்படி சந்தேகம் வந்து விசாரிக்கும்போது அவர்கள் ஏதோ ஒரு காரணத்தைச் சொன்னதும் விட்டுவிடுகிறார்கள்.

விடிந்தால் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஊரில், 3 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டால் என்ன பரபரப்பு தொற்றிக்கொள்ளும்? உயரதிகாரிகள் குவிந்துவிட மாட்டார்களா? ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே எல்லாவற்றையும் டீல் செய்கிறார். கடைசியில் அனைத்துக் குற்றச் சம்பவங்களையும் ஒரு புள்ளியில் இணைத்து யூகிக்கவே முடியாத ஒரு காரணத்தைச் சொல்லியிருப்பதை நம்ப மனம்மறுக்கிறது. ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால் பாடல், காமெடி போன்ற ‘டெம்ப்ளேட்’களை இயக்குநர் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சிபிராஜ் அழகாக நடித்திருக்கிறார். திருநீரை பூசிக்கொண்டு சாந்தமாகவும் குற்றவாளிகளைப் பந்தாடும்போது கோபமாகவும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக கஜராஜின் நடிப்பில் குறையில்லை. ராஜ் ஐயப்பா, ஜீவா ரவி, திலீபன், சரவண சுப்பையா, தங்கதுரை, குரோஷி உள்பட துணைக் கதாபாத்திரங்களும் தேவையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். த்ரில்லர் படத்துக்குரிய பின்னணிஇசையை கே.எஸ்.சுந்தரமூர்த்தி வழங்கியிருக்கிறார். ஜெய் கார்த்திக்கின் கேமரா, இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. டென் ஹவர்ஸ் - ரோலர் கோஸ்டர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in