

முதல் முறையாக சபரிமலை கோயிலுக்கு வந்து தரிசித்தது குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி, ரவி மோகன், தயாரிப்பாளர் லட்சுமண் உள்ளிட்ட பலர் சபரிமலைக்கு சென்றார்கள். அங்கு ஐயப்பன் கோயிலில் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
தற்போது சபரிமலைக்கு முதல் முறையாக வந்திருப்பது குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், “கன்னிச்சாமி ஆக முதன்முறையாக ரவி மோகன் மற்றும் நண்பர்களுடன் வந்துள்ளேன். அனைவரும் ஹரிவராசனம் பாடும்போது, அங்கிருந்து பார்த்தது ரொம்ப தெய்வீகமாக இருந்தது. மகரஜோதிக்கு வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இப்போது வெறும் சாமியை மட்டுமே பார்க்க வந்தேன். வேண்டுதல் எதுவுமில்லை பிரார்த்தனை மட்டுமே.
வயதானவர்கள், குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது இவ்வளவு நாள் இங்கு வரவில்லையே என்று தோன்றியது. இந்த முறை நீ வந்தே ஆக வேண்டும் என்று அழைத்து வந்தது ரவி மோகன்தான். ஜெயராம் சாருடன் வர வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். அவருடன் ஒருமுறை வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.