தமிழ் சினிமா 2025 வசூலில் நம்பர் 1 - அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சாதனை!

தமிழ் சினிமா 2025 வசூலில் நம்பர் 1 - அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சாதனை!
Updated on
1 min read

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான முதல் 5 நாட்களில், உலக அளவில் ரூ.170 வசூலுடன், 2025-ல் அதிக வசூல் ஈட்டிய நம்பர் 1 தமிழ் திரைப்படம் என்ற சாதனையைத் தொடுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’. ‘மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா அம்சங்களுடன் அவரது பல படங்களின் ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது.

‘குட் பேட் அக்லி’ படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்தான், 2025-ம் ஆண்டில் இதுவரை ரிலீஸான தமிழ்ப் படங்களிலேயே ‘வசூலில் முதல் இடம்’ என்ற சாதனையை உறுதி செய்திருக்கிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.

இப்படம் வெளியான முதல் 4 நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.148.50 கோடி வசூலை கடந்துள்ளது. தமிழகத்தில் ரூ.84 கோடி உள்பட இந்திய வசூல் ரூ.100 கோடி என்பதும் இதில் அடங்கும். இன்று (ஏப்.14) தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி அரங்குகள் நிறைந்துள்ளதால், 5 நாள் வசூல் ரூ.170 கோடியை எளிதில் எட்டிவிடும். விரைவில் முதல் வார வசூல் என்பதும் ரூ.200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசூலின் மூலம் 2025-ம் ஆண்டில் இதுவரை ரிலீஸான தமிழ்ப் படங்களிலேயே ‘வசூலில் முதல் இடம்’ என்ற சாதனையை உறுதி செய்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. முன்னதாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஒட்டுமொத்தமாக ரூ.136 கோடியை ஈட்டியிருந்தது. அதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ மொத்த வசூலான ரூ.152 கோடியை தற்போது ‘குட் பேட் அக்லி’ வெறும் 5 நாட்களில் தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, அதிக வசூல் ஈட்டிய அஜித் படங்கள் பட்டியலிலும் ‘குட் பேட் அக்லி’ முதலிடத்துக்கு முன்னேற்ற வாய்ப்பு அதிகம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in