கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ இல்லை: இயக்குநர் செல்வராகவன்

கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ இல்லை: இயக்குநர் செல்வராகவன்
Updated on
1 min read

கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பண்ண முடியாது என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அப்படம் வெளியாகும் போது கொண்டாடப்படவில்லை. ஆனால், சமீபத்திய சில வருடங்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இதன் 2-ம் பாகம் குறித்து செல்வராகவனிடம் அனைத்து பேட்டிகளிலும் கேட்கப்பட்டு வருகிறது.

தற்போது செல்வராகவன் அளித்த பேட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ குறித்த கேள்விக்கு, “இப்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ கொண்டாடப்படும் போது என்ன சொல்வது எனத் தெரியவில்லை. எங்கு சென்றாலும் அனைவரும் கேட்கும் கேள்வி, ‘எப்போது ஆயிரத்தில் ஒருவன் 2’ என்று தான். தனுஷுடன் பேசி இது தான் என முடிவு செய்தோம். அதில் செய்த தப்பு என்னவென்றால் சீக்கிரமாக அறிவிப்பு வெளியிட்டது தான்.

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தினை கார்த்தி இல்லாமல் செய்ய முடியாது. அந்த சோழர்கள், பாண்டியர்கள் என்ற உலகத்தினை திரும்பி கதையில் கொண்டு வருவது என்பது கஷ்டமாக இருக்கும். அதற்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். அதே போல் படப்பிடிப்புக்கு நடிகர்களின் தேதிகள் ஒரு ஆண்டு வேண்டும். நானாக ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்காமல் இல்லை.

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் பண்ண வேண்டும் என்ற ஆசை, வெறி எல்லாம் இருக்கிறது. இப்போது பட்ஜெட் குறைவாக தான் ஆகும். ஏனென்றால் அப்போதை விட இப்போது கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஆகும் செலவு குறைவு தான். இப்போது ஏஐ தொழில்நுட்பம் எல்லாம் வந்துவிட்டதால், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பண்ணுவது எளிது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in