

டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, தனுஷ் தயாரித்திருக்கும் 'காக்கா முட்டை' திரைப்படம் தேர்வாகி இருக்கிறது.
தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'காக்கா முட்டை'. இரண்டு சிறுவர்கள் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. டீஸர், ட்ரெய்லர் என எதுவுமே வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்படம் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் டொரொன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திரையிட இருக்கிறார்கள்.
இரண்டு சிறுவர்கள் தங்களது அம்மா மற்றும் பாட்டியுடன் வளர்ந்து வருகிறார்கள். மிகவும் ஏழையாக இருக்கும் இவர்களது வீட்டிற்கு அம்மா கஷ்டப்பட்டு ஒரு பழைய தொலைக்காட்சி பெட்டியை வாங்கி வருகிறார்.
அத்தொலைக்காட்சி பெட்டியில் ஒரு பீட்சா விளம்பரத்தை பார்க்கிறார்கள். அன்று முதல் பீட்சாவை எப்படியாவது சுவைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிறைவேறியதா என்பது தான் 'காக்கா முட்டை' படக்கதை.
தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவருமே தேசிய விருது வென்றவர்கள். அவர்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பது பல எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.