

'எனை நோக்கி பாயும் தோட்டா' இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், படத்தின் லோகோ வடிவமைப்பை மாற்றியிருக்கிறது படக்குழு.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறாமலே இருந்து வந்தது.
தற்போது தனுஷ் தேதி கொடுத்ததால், இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
மேலும், படத்திற்கான லோகோ வடிவமைப்பை மாற்றியிருக்கிறார்கள். புது லோகோ வடிவமைப்பை நேற்று (ஜூலை 20) சமூகவலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் பாடல்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் வாசுதேவ மேனன்.