Published : 03 Aug 2014 10:52 AM
Last Updated : 03 Aug 2014 10:52 AM

மென்மேலும் உழைப்பதற்காக வழங்கப்பட்ட விருதாக கருதுகிறேன்: வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கமல்ஹாசன் பேச்சு

தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் சோழநாச்சியார் பவுண்டேஷன் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

என்னுடைய இளம் வயதிலேயே நோட்டு, பேனா வாங்கிக் கொடுத்து என்னை திரைக்கதை எழுதத் தூண்டியவர் ஆர்.சி. சக்தி. அதேபோல் திரைத்துறையில் யாருக்கு விழா நடத்தினாலும், அது தனக்கான விழாவாகக் கருதும் பண்பு கொண்ட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் போன்ற பெருந்தகையாளர்கள் மத்தியில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது.

எனக்கு முன்மாதிரியாக இதற்கு முன்பிருந்த பல்வேறு உருவங்களைப் பார்த்து நான் செய்தது ஏதோ ஒருவரின் சாயலோ என்று சொல்ல முடியாதபடி ஒரு தனித்துவமாக மற்றவருக்குத் தெரிகின்றேன். உண்மை என்னவென்றால் மற்றவர் களின் சேர்க்கையில் உருவான கூட்டுக் கலவைதான் நான். ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொண்டு அங்கிருந்துதான் இந்த வாழ்நாள் சாதனை விருதைப் பெற வந்துள்ளேன். எப்பவோ செய்த சாதனைக்காக கொடுக்கப்படும் விருதாக அல்லாமல், இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிற, மென்மேலும் உழைப்பதற்கு என்ன உறுதியாக்கிக் கொள்ளும் விழாவாகத்தான் இந்த விழாவைப் பார்க்கிறேன்.

இந்தத் தகுதியை ஏற்படுத்தித் தந்த என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி. செய்யும் தொழில் தெய்வமோ இல்லையோ ஆனால் செய்யும் அந்தத் தொழில்தான் மேடையில் என்னை இங்கே அமர வைத்திருக்கிறது’’ என்றார். விழாவில் ஆளுநர் கே.ரோசய்யா, டைரக்டர்கள் ஆர்.சி.சக்தி, எஸ்.பி.முத்துராமன் வாழ்த்திப் பேசினர். சோழநாச்சியார் பவுண்டேஷன் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x