

‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் விலை ரூ.120 கோடி என்கிறார்கள் திரையுலகில்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் என்பதால், தொலைக்காட்சி உரிமையை அந்நிறுவனமே எடுத்துக் கொள்ளும். முதலில் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் விலை அதிகமாக இருந்ததால், அந்நிறுவனத்துக்கு ஓடிடி உரிமையினை கொடுத்துவிட்டார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.