காதல் கதைக்கு எந்த நாட்டிலும் வரவேற்பு உண்டு: கே.பாக்யராஜ்
விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'ட்ராமா'. தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார். டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழாவில் ராதா ரவி, கே.பாக்யராஜ், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயதாரணி என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, “ட்ராமா என்றால் ‘பாதிப்பு’ எனச் சொன்னார்கள். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. கதை விவாதத்தின்போது, உதவியாளர்களிடம் உன் மனதுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை அலசினால் நல்ல கதை கிடைக்கும் எனச் சொல்வேன். எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பைப் பெறும் ஒரே ஸ்டோரி, லவ் ஸ்டோரிதான். இன்றைய இளைஞர்கள் காதலிக்கிறார்களோ இல்லையோ, காதல் பற்றி கவிதை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகிறவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பிதுரை அப்படி அல்லாமல் இதில் 3 கதை களங்களை எடுத்திருக்கிறார். இதற்காகவே அவரை பாராட்டலாம்” என்றார்.
