

தனுஷை பின்பற்றுகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகமெங்கும் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் சுமார் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
அதேபோல் தெலுங்கிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது “நீங்கள் நடிகர் தனுஷை பின்பற்றுவது போன்று தெரிகிறதே” என்று பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “இதைப் பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். நான் யாரையும் காப்பியடித்து பின்பற்றவில்லை. என் உடலமைப்பை வைத்து அப்படி பேசுகிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்ணாடியை பார்க்கும் போது, நான் என்னைத் தான் பார்க்கிறேன்” என்று பதிலளித்தார் பிரதீப் ரங்கநாதன்.
அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “உங்கள் கண்ணுக்குதான் நீங்கள் பார்க்கும் நடிகரைப் போல் தெரிகிறார். என் கண்ணுக்கு பிரதீப் ரங்கநாதனாகவே தெரிகிறார். அவர் அவராக இருக்கிறார். என் கண்ணுக்கு நீங்கள் கூறும் நடிகரைப் போல் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.