

நானி நடிப்பில் உருவாகவுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நானி – ஸ்ரீகாந்த் ஒடெலா இணைப்பில் வெளியான படம் ‘தசரா’. இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது. இந்தப் படத்துக்கு ‘தி பாரடைஸ்’ என தலைப்பிட்டது படக்குழு. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமை ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. இதன் காட்சியமைப்புகள், வசனங்கள், நானியின் கெட்டப் என இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நானியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.