

பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் உட்பட பலர் நடித்து, கடந்த 21-ம் தேதி வெளியான படம், ‘டிராகன்’ . ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அஸ்வத் மாரிமுத்து கூறும்போது, “டிராகன் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, மகிழ்ச்சியளிக்கிறது. படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தேன். அதை எதிர்பார்த்துதான் அனைவரும் உழைக்கிறோம். இதுபோன்ற ஒரு போன்ற ஒரு வெற்றி, எனக்குப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனில் இருந்து படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். டெக்னீஷியன்களின் உழைப்பும் மறக்க முடியாதது. இந்தப் படத்தில் அறிமுகமான கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறார். இதில் நடிக்க அழைத்தபோது அவரிடம் சொன்னேன், ‘இந்தப் படம் கண்டிப்பாகத் தமிழில் உங்களுக்கு நல்ல இடத்தைக் கொடுக்கும்’ என்று. அது நடந்திருக்கிறது. அடுத்து சிம்பு படத்தை இயக்குகிறேன். அந்தப் படத்திலும் நல்ல மெசேஜ் இருக்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அந்தப் படம் தொடங்கும்” என்றார்.