

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று உலகமெங்கும் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு தனுஷ் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “‘ராயன்’ படத்துக்குப் பின் நான் இயக்கியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இப்படத்தினை எடுக்கும்போது எந்தளவுக்கு ஜாலியாக எடுத்தோமோ, அதைப் பார்க்கும்போது நீங்களும் சந்தோஷப்படுவீர்கள் என நம்புகிறேன்.
இப்படத்தில் நடித்துள்ள இளைஞர்கள் அனைவரும் அவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி, கண்ணில் பல கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். அந்த கனவுகள் அனைத்தும் நிறைவேற கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அந்த தருணத்தில் இருந்திருப்பதால், அந்த உணர்வு எப்படிப்பட்டது என தெரியும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக லியோ பிரிட்டோம், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.