சமூக வலைதளத்தை எப்படி அணுக வேண்டும்? - விஜய் சேதுபதி அட்வைஸ்

சமூக வலைதளத்தை எப்படி அணுக வேண்டும்? - விஜய் சேதுபதி அட்வைஸ்
Updated on
1 min read

சமூக வலைதளத்தை மாணவர்கள் கவனத்துடன் அணுக வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி அறிவுறுத்தியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையே பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் விஜய் சேதுபதி.

அவரிடம் “அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, “நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு நடப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்க முடியாமல் போய்விட்டது. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.

“இங்குள்ள மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி, “சந்தோஷமாக இருங்கள். சமூக வலைதளத்தைப் பாருங்கள். அதில் தவறில்லை. அதில் எது தேவை, தேவையில்லை என்று பிரித்து பார்க்க புரிந்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் நம்பாதீர்கள். உங்களுடைய மூளையை குறிவைத்து நிறைய குப்பைகள் இருக்கிறது.

காலம் ரொம்ப அற்புதமானது, அது ரொம்ப குறைவாக இருக்கிறது. அது எவ்வளவு முக்கியம் என்பது கடந்து போன பின்புதான் தெரியும். மற்றபடி வாழ்க்கை அனைவருக்கும் வரம்தான்” என்று பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in