

முதலீட்டார்கள் அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்திருப்பதால் மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்குமே நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்குப் பிறகு வெளியான ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட சில படங்கள் எதுவுமே அதிக லாபம் ஈட்டும் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இதனால் மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் ‘குடும்பஸ்தன்’ திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வசூல் ரூ.25 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் என அனைத்துமே விற்பனையாகிவிட்டதால், தயாரிப்பாளருக்கு ‘குடும்பஸ்தன்’ மூலம் நல்ல லாபம்தான் என்பது உறுதியாகிவிட்டது.
‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய ‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சுப்ரமணியம், இசையமைப்பாளராக வைஷாக் உள்ளிட்டோர் பணிபுரிந்திருந்தார்கள். இப்படத்தை எஸ்.வினோத்குமார் தயாரித்திருந்தார்.