

“என்னை சிலர் அடிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
‘டிராகன்’ படத்தின் வெளியீட்டு முந்தைய விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தன்னுடன் நடித்த, பணிபுரிந்த அனைவரையும் பெயர் குறிப்பிட்டு பேசி நன்றி தெரிவித்தார் பிரதீப் ரங்கநாதன். பின்பு தனது பேச்சை முடிக்கும் முன்பாக, “சில பேர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள், அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏன், எதற்கு என்று அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு செடி வளரும் போது, ஒரு சிலர் இலை, காம்பு என்று பிய்த்து போட்டு செல்வார்கள். சிலர் செடியை மிதித்துவிட்டுச் செல்வார்கள். அந்த தருணத்தில் எல்லாம் செடியின் வேர் வளர்ந்து வலிமையாக உருவாகிக் கொண்டிருக்கும். அந்தச் செடி மட்டும் அப்போதைய வலியை எல்லாம் தாங்கிக் கொண்டால் அதற்குப் பின் அது பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த நேரத்தில் அந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றும் அனைவருக்கும் நன்றி” என்று தனது பேச்சை முடித்தார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின், விஜேசித்து, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இதன் ஒளிப்பதிவாளராக நிக்கத் பொம்மி, இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ், எடிட்டராக பிரதீப் இ ராகவ் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.