

ஹைதராபாத்: பெண் குழந்தைகள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்துகள் கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தனது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய சிரஞ்சீவி தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு, இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசிய ஒரு கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிரஞ்சீவி பேசுகையில், “நான் வீட்டில் இருக்கும்போது லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போல உணர்கிறேன். நம்முடைய மரபை தொடர ஒரு ஆண் வாரிசை பெற்றுக் கொடுக்குமாறு ராம் சரணிடம் தொடர்ந்து சொல்கிறேன். சரண் தனது மகளை மிகவும் நேசிக்கிறார். அவருக்கு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று பேசினார்.
பெண் குழந்தை குறித்த சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சிரஞ்சீவி போன்ற சமூகத்தில் மதிக்கப்படும் ஒரு நபர், பாலின வேறுபாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் இவ்வாறு பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை சிரஞ்சீவி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.