

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹென்றி உட் எழுதிய புகழ்பெற்ற நாவல்கள், ‘டான்பரி ஹவுஸ்’, ‘ஈஸ்ட் லின்’. இதில் டான்பரி ஹவுஸ் நாவல் தந்த பாதிப்பில் எஸ்.எஸ்.வாசன் எழுதிய தொடர்கதையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் நடித்த ‘சதிலீலாவதி’ உருவானது. ஈஸ்ட் லின் கதையை அப்படியே எடுத்து ‘தாய் உள்ளம்’ ஆக்கினார் இயக்குநர் கே.ராம்நாத்.
ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.ராம்நாத் அங்கிருந்து 1947-ம் ஆண்டு விலகி, நாராயணன் கம்பெனியில் சேர்ந்தார். அந்த நிறுவனம் தயாரித்த படம் இது.
இதில், ஆர்.எஸ்.மனோகர் ஹீரோவாக நடித்தார். வில்லனாக நடிக்க டி.எஸ்.பாலையாவிடம் பேசினார்கள். அவர் ரூ.75 ஆயிரம் சம்பளம் கேட்டதால் அவருக்குப் பதிலாக, அப்போது வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ஆர்.கணேஷுக்கு அந்த வேடத்தைக் கொடுத்தனர். அவர்தான் பின்னர் ஜெமினி கணேசன் ஆனார். ஆனால், கால மாற்றத்தில் ஜெமினி கணேசன் பெரிய ஹீரோவாகவும், மனோகர் சிறந்த வில்லனாகவும் உருவெடுத்தது எதிர்பாராத முரண்! வில்லனுக்கே வில்லனானவர் ஜெமினி என்பார்கள் அவரை.
எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, என்.சீதாராமன், சந்திரபாபு, கே.ஆர்.செல்லம், சி.வி.வி.பந்துலு, டி.பி.முத்துலட்சுமி, சி.கே.சரஸ்வதி என பலர் நடித்தனர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, கனகசுரபி ஆகியோரின் பாடல்களுக்கு நாகையா, ஏ.ராமராவ் இசை அமைத்தனர்.
எம்.எல்.வசந்தகுமாரி குரலில் வந்த ‘கொஞ்சும் புறாவே’, ‘கோவில் முழுதும் கண்டேன் உயர்கோபுரம் ஏறிக் கண்டேன்’, ‘கதையை கேளடா... கண்ணே, ராதா ஜெயலக்ஷ்மி பாடிய போக்கிரி பயலே... உன்னைத் தூக்கவே மாட்டேன்’, ஜிக்கி பாடிய ‘சின்ன சின்ன பேபி சிங்கார பேபி’ என அனைத்துப் பாடல்களும் அப்போது வரவேற்பைப் பெற்றன.
இதில் கொஞ்சும் புறாவே பாடல், இந்தியில் 1951-ம் ஆண்டு ‘நவ்ஜவான்’ படத்தில் எஸ்.டி.பர்மன் இசையில் வந்த ‘டண்டி ஹவாயேன்’ பாடலின் தழுவல் என்றாலும் எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் தனித்துவமாகத் தெரிந்தது.
1951-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.