பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்: இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்: இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது
Updated on
1 min read

பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் சினிமாவில் 1960, 1970 மற்றும் 80 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா. 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே பார், ஆலயமணி, வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, ராஜபார்ட் ரங்கதுரை, ஆயிரம் ஜென்மங்கள், கல்யாண ராமன் என பல படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள இவர், 'நானும் ஒரு பெண்' படத்தில் ஏ.வி.எம். ராஜனுடன் நடித்தபோது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏ.வி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி கிறிஸ்தவ மத பிரசங்கம் செய்து வந்தனர். இவர்களுக்கு அபிராமி, மகாலட்சுமி ஆகிய மகள்கள் உள்ளனர். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த புஷ்பலதா, வயது மூப்பு காரணமான உடல் உபாதைகளுக்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவர் உடலுக்குத் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பூச்சி எஸ்.முருகன், கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை ராயப்பேட்டையில் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in