பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
Updated on
1 min read

சென்னை: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87.

வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா செவ்வாய்க்கிழமை (பிப்.04) காலமானார். தமிழில் 1958ஆம் ஆண்டு வெளியான ’செங்கோட்டை சிங்கம்’ படம் மூலம் புஷ்பலதா அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1964ஆம் ஆண்டில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்தார். ‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

70களில் இருந்து ஏராளமான துணை கதபாத்திரங்களில் நடித்த அவர் 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். புஷ்பலதாவின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புஷ்பலதாவின் இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in