

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் குறித்த குறித்து சர்ச்சையானதால் கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘Dominic and the Ladies' Purse’ திரைப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில பேட்டிகள் அளித்திருந்தார் கவுதம் மேனன். அதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, “அப்படத்தை நான் பண்ணவில்லை. வேறு யாராவது பண்ணியிருப்பார்கள். எனக்கு அதிலிருந்து ஒரு பாடல் மட்டுமே நினைவு இருக்கிறது” என்று பதிலளித்தார் கவுதம் மேனன்.
இந்தப் பதில் இணையத்தில் பெரும் சர்ச்சையையும், விவாத்தையும் உண்டாக்கியது. தனுஷ் ரசிகர்கள் பலரும் கவுதம் மேனனை வசைபாட தொடங்கினார்கள். தற்போது அப்பேட்டியில் கூறியதற்கான அர்த்தத்தை தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.
அதில், “காமெடியாக சொன்னது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது. படத்தின் இரண்டாம் பாதி நான் நினைத்த மாதிரி படமாக்க முடியவில்லை. அதில் நிறைய சவால்களை சந்தித்தேன்.
என்னுடன் அலுவலகத்தில் இருப்பவர்கள் இணையத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்து கூறினார்கள். எனவே இதை தெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வேறு ஒருவரால் தயாரிக்கப்பட்டு இருந்தால் அந்தக் கருத்து முற்றிலும் தவறாக இருக்கும். அப்படத்தினை நான்தான் தயாரித்தேன். நான் நினைத்த மாதிரி என்னால் முதல் பாதி மட்டுமே படமாக்கப்பட்டது. அதன் நாயகன் தேதிகள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ‘வடசென்னை’ படத்தில் பிஸியாக இருந்ததால், குறுகிய காலத்தில் படத்தினை முடிக்க வேண்டிய சூழல் உருவானது” என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தினை ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. இதன் வெளியீட்டு பல்வேறு சிக்கல்கள் ஏற்படவே, இறுதியாக வேல்ஸ் நிறுவனம் தலையிட்டு இப்படத்தினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.