‘குடும்பஸ்தன்’ வசூல் நிலவரம் என்ன?

‘குடும்பஸ்தன்’ வசூல் நிலவரம் என்ன?
Updated on
1 min read

நடிகர் மணிகண்டனின் மற்றொரு வெற்றிப் படம் என்ற பட்டியலில் இணைந்துள்ளது ‘குடும்பஸ்தன்’. அதற்கேற்றபடியே, படத்தின் வசூல் நிலவரம் உள்ளது.

‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார்.

சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 24-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘குடும்பஸ்தன்’ முதல் நாளில் ரூ.1 கோடி, இரண்டாவது நாளில் ரூ.2.2 கோடி, மூன்றாவது நாளில் ரூ.3.2 கோடி, நான்காவது நாளில் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது நாளான செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடியை எட்டும் நிலையில் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், முதல் 5 நாட்களில் இந்திய அளவில் ரூ.8 கோடியை கடந்துள்ளது.

தற்போதைய வசூல் நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான ‘குடும்பஸ்தன்’, மணிகண்டனின் மற்றொரு வெற்றிப் படமாகவே உருவெடுத்துள்ளது. இப்படம், பட்ஜெட்டை தாண்டி கூடுதல் லாபம் ஈட்டுவது உறுதி என்று திரை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

படம் எப்படி? - காதலி வெண்ணிலாவை (சான்வே மேகனா) சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறார் நவீன் (மணிகண்டன்). எதிர்ப்பு இருந்தாலும், நவீன் வீட்டிலேயே இருவருடைய வாழ்க்கையும் தொடங்குகிறது. தன்னை கேவலமாக நினைக்கும் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கும் நவீனுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீரென வேலை பறி போகிறது. என்றாலும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அவர், கடன் வாங்கி குவிக்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதை கலகலப்பாகச் சொல்கிறது படம்.

இந்தக் காலத்துக்கேற்ற கதையை இயக்கி இருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி. வழக்கமான குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்தின் ஓட்டத்துக்காக நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை ஏராள நகைச்சுவையுடன் தாராளமாகக் கொடுத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப் பெரும் பலம்.

நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை எந்தவித சீரியஸ்தன்மையும் இன்றி முழுக்க முழுக்க ரகளையான விதத்தில் ஜாலியாக சொல்லப்பட்ட இந்த ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு வரவேற்பு கூடி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in