

‘மதகஜராஜா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஷால் - சுந்தர்.சி காம்போ இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியாக இருந்த ‘மதகஜராஜா’ திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளால் 12 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வெளியானது. அத்துடன் வெளியான அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி வசூலில் முதலிடத்தினை பிடித்துள்ளது. 12 நாட்களில் 50 கோடி மொத்த வசூலை கடந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதனிடையே, இந்த வெற்றியை முன்வைத்து விஷால் - சுந்தர்.சி இருவரும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இது மீண்டும் இணைந்து படம் பண்ணுவது குறித்த பேச்சுவார்த்தை தான் என்று விஷாலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படத்தினை விஷால் மற்றும் சுந்தர்.சி இணைந்து தயாரித்து வெளியிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்கள்.
முன்னதாக ‘ஆம்பள’ மற்றும் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்து பணிபுரிந்திருக்கிறது. இப்போது 3-ம் முறையாக இணைவது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி படத்தினை உடனே தொடங்கி, விரைவில் வெளியிட்டுவிட வேண்டும் எனவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.