

‘பாட்டல் ராதா’ விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் அருள்தாஸ்.
சமீபத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டல் ராதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு திரையுலகினர் சிலர் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அவர் மிஷ்கின் பேசியது குறித்து, “மேடையில் மிஷ்கின் பேசியது எல்லாம் அவ்வளவு ஆபாசமாக இருந்தது. இயக்குநராக இருப்பதால் எது வேண்டுமானாலும் பேசிவிட முடியாது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் பிரசாத் லேப் மேடையில் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். வெளியே என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், மேடை நாகரிகம் என ஒன்று இல்லையா. அவ்வளவு உலக படங்கள் பார்த்திருக்கிறேன், புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்கிறீர்கள். அந்த அறிவு எங்கே?
தம்பி என்று யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். அதற்கு சம்பந்தப்பட்டவர் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். அனைவரையும் வாடா, போடா என்று அழைக்கிறார். இப்படி தொடர்ச்சியாக பல மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பாலா 25 விழாவிலும் கூட, “படுத்துக் கிடந்தான் பாலா. அவன் தான் பாலா” என்றார்.
பாட்டல் ராதா மேடையில் “அவன் தான் இளையராஜா” என்கிறார். யாருடா நீ? தமிழ் சினிமாவில் நீங்கள் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அவர் ஒரு போலி அறிவிவாளி. மிஷ்கின் பேசிய மேடை எனக்கு ரொம்பவே அருவருப்பாக இருந்தது.
மிஷ்கின் அவர்களே, நீங்கள் ஒரு ட்ரெண்ட்சென்டர் படம் இயக்கி ஜெயிக்கவில்லை. குத்தாட்ட பாடல்களை வைத்து சாதாரண கதைகளை இயக்கி தான் ஜெயித்திருக்கிறீர்கள்.
வெளிநாட்டு படத்தின் மோகத்தில் அதன் காட்சியமைப்புகள் காப்பியடித்து ஜெயித்த மிஷ்கின் ஒரு போலி புத்திசாலி. இனியும் பல மேடைகளில் பேசலாம், ஆனால், நாகரிகமாக பேசுங்கள். ஏற்கெனவே சினிமாக்காரர்களை பார்க்கும் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. நம்மை நாமே தாழ்த்தி வெளியே அசிங்கப்பட வேண்டாம் என நினைக்கிறேன். இது என்னுடைய மனக்குமுறல், அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.