

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள படம், ‘பாட்டல் ராதா’. குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஷ்கின், பா.ரஞ்சித் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் பேசும்போது, ‘‘இன்றைய சூழலில் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி இருக்கிறோம். எல்லா காலகட்டத்திலும் இந்த ‘அடிக்ஷன்’ இருந்திருக்கிறது. இன்றைக்கு இன்னும் அதிகமாக இருக்கிறது. இப்போது டிஜிட்டல் அடிமையாகி இருக்கிறோம். முன்பு ஒரு தெருவில் 5 பேர் மது குடிப்பவர்களாக இருந்தால் அதில் ஒருவர் குடிநோயாளியாக இருப்பார்.
இன்று ஒரு வீட்டில் இருப்பவர் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். தெருவுக்குப் பத்து குடி நோயாளிகள் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் ‘பாட்டல் ராதா’ மாதிரியான படங்களை உருவாக்குவது சமூகத்துக்கு அவசியம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அரசியல் முக்கியமானது. இது பாசிட்டிவான படம்” என்றார்.