

‘வணங்கான்’ படம் குறித்தும், தனது கரியர் பற்றியும் பல்வேறு கருத்துகளை வெளியிட்ட இயக்குநர் பாலா, நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கான காரணம் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வணங்கான்’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பாலா பதிலளித்துள்ளார். அதன் விவரம்:
உங்களுடைய படங்களில் க்ளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் வன்முறை, கோபம் யாரிடமிருந்து வந்தது?
கற்றுக்கொண்டு வருவதில்லை. தவறான பதிலாக கூட இருக்கலாம். அது ரத்தத்தில் இருக்கிறது.
நாயகன் அறிமுகக் காட்சியில் விநாயகர் மற்றும் பெரியாரை கையில் வைத்திருப்பார்? அது ஏன்?
க்ளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு குறியீடுதான். தங்கை இறந்தவுடன் படைத்தவனும் இங்கே கை விரித்தாய் என்று முடியும். ஆகவே ஆரம்பம் மற்றும் முடிவு என ஒரு குறியீடுக்காக வைத்தது தான்.
படத்தின் கதை உண்மை சம்பவமா, நாயகனை காது கேட்காத வாய் பேச முடியாதவராக காட்டியது ஏன்?
அந்தச் சம்பவம் சென்னையில் தான் உண்மையில் நடந்தது. அந்தப் பள்ளியின் பெயரை சொல்ல முடியாது. வசனம் பேசி பேசியே புரிய வைக்க வேண்டும் என்ற இந்தக் காலத்தில் வசனம் பேசாமலேயே புரிய வைக்கலாம் என்ற ஒரு முயற்சிதான் நாயகன் கதாபாத்திரம்.
உங்களுடைய அனைத்து படங்களிலும் கிறிஸ்துவ மதம் குறித்து சிவாஜி கணேசன் குறித்தும் சொல்ல வருவது என்ன?
கிறிஸ்துவ மதத்தை கிண்டல் செய்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. தங்கச்சி பாடும் பாடலைக் கேட்டீர்கள் என்றால் அப்படிச் சொல்ல மாட்டீர்கள். சிவாஜி ஐயாவை ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரை என் படத்தில் கொண்டு வருகிறேனோ என்னவோ.
ஸ்டைலிஷான படங்களை எப்போது இயக்குவீர்கள்?
ஒரு கதை இருந்தால் கொடுங்கள் எடுப்போம்.
தெலுங்கு, இந்தி சினிமாக்களில் ரூ.1000 கோடி வசூல் படங்கள் வந்துவிட்டது. தமிழ் சினிமாவுக்கு வராததற்கு காரணம் என்ன?
வியாபார நுணுக்கத்தில் அவ்வளவு ஞானம் இல்லை.
அருணை விட சூர்யா நடித்திருந்தால் இன்னும் வெற்றியாகி இருக்கும் என நினைக்கிறீர்களா?
இப்போது ஹிட்டாகி இருக்கிறது. இன்னார் நடித்திருந்தால், அமிதாப் பச்சன் நடித்திருந்தால், ஷாரூக்கான் நடித்திருந்தால் என ஏன் பின்னாடி செல்ல வேண்டும். படம் வெற்றியாகிவிட்டது.
அடுத்த படம்? குற்றப் பரம்பரை எப்போது?
அது குற்றப்பரம்பரை அல்ல, எழுதப்பட்ட கதை என்று சொல்லிவிட்டேன். அதை எடுக்கப் போறதும் இல்லை. அடுத்தப் படம் குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை.
உங்களுடைய படங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?
அவர்களுடைய உலகத்தை காட்ட வேண்டும். சும்மா பார்த்துவிட்டு என்ன இப்படி இருக்கிறார்கள் என ஒதுங்கி போகக் கூடாது. நம்மை நம்பி தானே அவர்களும் வாழ்கிறார்கள்.
விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை என்றபோது பலரும் உங்களை குற்றம்சாட்டினார்களே...
என்ன பதில் சொல்வது... மருத்துவச் சான்றிதழ் வேண்டுமானால் வாங்கிக் கொடுக்கலாம். அவர்களுக்கு தோன்றுவதை பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
பாலு மகேந்திராவின் சிஷ்யர்கள் அனைவருமே நல்ல நிலையில் இருக்கிறீர்கள். அவருடைய நினைவாக சிலை, தெரு என சென்னையில் எதுவுமே இல்லையே. ஏன் மறந்தீர்கள்?
மறந்தீர்கள் என்று எப்படி சொல்லலாம். அவர் எங்களுக்குள்ளயே இருக்கிறாரே. சிலை, தெரு எல்லாம் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டியது. நாமே தெருவை உருவாக்கி பெயர் வைத்தால் விடுவார்களா. ஆகையால் அதை முறைப்படி செய்ய வேண்டும்.