

‘துருவ நட்சத்திரம்’ படத்தை சூர்யா வேண்டாம் என சொன்னது மிகவும் வருத்தமே என்று பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் பல்வேறு சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சி செய்யப்பட்டு, அது நடக்கவில்லை. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘Dominic and the Ladies' Purse’ என்ற படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார் கவுதம் மேனன்.
அதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்காமல் போனது குறித்து பேசியிருக்கிறார். அப்பேட்டியில் கவுதம் மேனன், "‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிப்பதற்கு சூர்யா யோசித்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்கள் அப்படித்தான் பண்ணினோம். படத்தின் ஐடியா, கதை எல்லாமே தயாராக இருந்தது.
‘வாரணம் ஆயிரம்’ படத்தின் அப்பா கதாபாத்திரத்துக்கு நானா படேகர் மற்றும் மோகன்லால் ஆகியோரிடம் பேசினேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை. உடனடியாக சூர்யா, நானே அப்பா கதாபாத்திரமும் பண்றேன் என்றார். அதே மாதிரி ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அதன் கதையைக் கேட்டுவிட்டு நிறைய முறை பேச்சுவார்த்தை நடந்தது.
இக்கதைக்கு என்ன குறிப்புகள் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தார். குறிப்புகள் என்று எதுவும் இல்லை, நீங்கள் வந்தால் நான் ஒன்று பண்ணுவேன் என சொன்னேன். ஆனால், அவர் நம்பவில்லை. முன்பு நம்மை வைத்து 2 படங்கள் வெற்றிக் கொடுத்தவர் என்று நினைக்கவில்லை என்பதுதான் எனது எண்ணம். என்னை நம்பி வாங்க என்று எவ்வளவோ கேட்டேன். ஆனால் அது நடக்கவில்லை.
வேறு யார் வேண்டாம் என்று சொல்லியிருந்தாலும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டேன். ஆனால், சூர்யா வேண்டாம் என்று சொன்ன போது ரொம்பவே வருத்தப்பட்டேன்.” என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.