ரவி மோகன் விவாகரத்து வழக்கு - சமரச பேச்சு தொடர்வதாக தகவல்

ரவி மோகன் விவாகரத்து வழக்கு - சமரச பேச்சு தொடர்வதாக தகவல்

Published on

சென்னை: விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த 3-வது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி சுமுக பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மத்தியஸ்தர் முன்னிலையில் ரவியும், ஆர்த்தியும் பலமுறை ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு ரவியின் விவாகரத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தம்பதியர் தனித்தனியே காணொலி வாயிலாக ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகு, விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in