

இனி கேரக்டர் ரோல் செய்யப் போவதில்லை என்று நடிகர் கலையரசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வள்ளி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகம், கலையரசன், நிகாரிகா கொனிடாலா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ்காரன்’. ‘விடாமுயற்சி’ வெளிவராத காரணத்தினால் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இச்சந்திப்பில் கலையரசன் பேசும் போது, “இனிமேல் ரொம்ப கேரக்டர்ஸ் செய்யப் போவதில்லை. இங்கு நான் ரொம்ப ஹெல்தியாக இல்லை என்பதை உணர்கிறேன். நிறைய கேரக்டர்களில் நடித்தது தான் இப்போது சாப்பாடு போட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறக்கவில்லை. மலையாளத்தில் நிறைய பேர் மல்டி ஸ்டாரர் படங்களும் பண்ணுவார்கள், நாயகனாகவும் பண்ணுவார்கள். இங்கு அது குறைவு.
இங்கு ஒரு படத்தில் கேரக்டர் ரோலில் நடித்துவிட்டால், உடனே அதே மாதிரி அனைத்து படங்களுக்கும் கூப்பிடுகிறார்கள். சாவு என்று கதையில் இருந்தாலே உடனடியாக என் பெயரை எழுதிவிடுகிறார்கள். அதுவொரு பஞ்சாயத்தாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட அது இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டது. நன்றாக நடித்தால் ஏற்றுக் கொள்வது போல், கிண்டலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே அதை ஏற்றுக் கொள்கிறேன்.
என்னை இன்னும் ஒரு படத்தில் 2-வது தரப்பு நாயகனாகவே வைத்திருக்கிறார்கள். அது ரொம்பவே வேதனையை தருகிறது. ஆகவே இனி ரொம்ப நல்ல கேரக்டர் இருந்தால் மட்டுமே அதில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் கலையரசன்.