

திரையரங்கில் பார்க்கிங் மற்றும் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
கதிரவன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருடன் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, “காதல் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள். சின்ன படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்ன படங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை. படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சினையில்லை.
சின்னப் படங்களுக்கு மக்களை வரவைக்க என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் கார் பார்க்கிங் கொள்ளை. இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது” என்று பேசினார்.