

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, இறுதிகட்டப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் படத்தின் அறிவிப்பு டீஸர் வெளியானவுடன், பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பல்வேறு விநியோகஸ்தர்கள், அதன் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டியிட்டு வருகிறார்கள். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
தற்போது இறுதிகட்டப் பணிகளை தீவிரப்படுத்தி முதல் பிரதியை தயார் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்குப் பிறகே தமிழக உரிமை வியாபாரத்தை இறுதி செய்யலாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். காமெடி கலந்த குடும்பப் பின்னணி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.