‘காதல் சடுகுடுகுடு’ பாடலை ரீமிக்ஸ் செய்தது ஏன்? - மெட்ராஸ்காரன் இயக்குநர் விளக்கம்

‘காதல் சடுகுடுகுடு’ பாடலை ரீமிக்ஸ் செய்தது ஏன்? - மெட்ராஸ்காரன் இயக்குநர் விளக்கம்

Published on

மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் நடிக்கும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் பற்றி இயக்குநர், வாலி மோகன்தாஸ் கூறும்போது, “சென்னையில் வேலை பார்க்கும் ஹீரோ, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காதலியை திருமணம் செய்வதற்காக செல்கிறார். அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு விஷயம் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்வதற்கான விஷயங்கள் படத்தில் அதிகம் இருக்கிறது.

இந்த கதைக்கு ஷேன் நிகம் சரியாக இருப்பார் என்று நினைத்தோம். அப்போது மலையாளத்தில் அவர் நடித்த ‘ஆர்டிஎக்ஸ்’ ஹிட்டாகி இருந்தது. அவரை தொடர்பு கொண்டதுமே தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தார். கதையை கேட்டதும் ஒப்புக் கொண்டார். படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஹீரோவுக்கும் அவருக்குமான ஈகோ படம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும். இதில் ‘அலைபாயுதே’ படத்தில் இடம் பெற்ற ‘காதல் சடு குடு குடு’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளோம். முதலில் அந்தப் படத்தில் வரும் ‘யாரோ யாரோடி’ போல கல்யாண பாடலை சேர்க்க நினைத்தோம். பிறகு ‘காதல் சடு குடு குடு’ பாடலையே ரீமிக்ஸ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார். >>பாடல் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in