

காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.
‘யங் மங் சங்’, ‘லக்ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார்.
தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இருவரும் கணவன் - மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார்.
போலீஸ் கதை என்பதால், ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘பொன் மாணிக்கவேல்’ உருவாகி வருகிறது. மொத்தம் 5 சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.