

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
‘கோட்’ படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இப்படத்தின் கதையை எழுதி வருவதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார் வெங்கட் பிரபு. இதன் தயாரிப்பாளர் யார்? எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த தகவலும் தெரியாமல் இருக்கிறது.
ஏனென்றால், முதலில் சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்காரா இருவரது படங்களையும் சிவகார்த்திகேயன் முடிக்க வேண்டும். இதில் சிபி சக்கரவர்த்தி படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. சுதா கொங்காரா படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களை முடிக்கவே அடுத்த ஆண்டு இறுதிவரை ஆகும் என தெரிகிறது.
இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்ஷய் குமாரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. முதற்கட்டப் பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் பலகட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகே, இந்தக் கூட்டணி இணையுமா என்பது தெரியவரும்.