‘விடுதலை பாகம் 2’-ன் முதல் 3 நாள் வசூல் நிலவரம் என்ன?
சென்னை: விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 2’ படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. டிசம்பர் 20-ல் ‘விடுதலை பாகம் 2’ திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ.8 கோடி வசூலை நெருங்கிய இப்படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் மிகுந்துள்ளன. இதன் எதிரொலியாக, அடுத்த இரு தினங்களில் கூடுதல் வசூலை ஈட்டியுள்ளது. இதன்மூலம், முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் வருவதால், ‘விடுதலை பாகம் 2’-ன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விமர்சன ரீதியில் மட்டுமின்றி வர்த்தக ரீதியிலும் இது வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழு நம்பிக்கை கொண்டுள்ளது.
இதனிடையே, ‘விடுதலை பாகம் 2’-ன் வெற்றிக்கு அளித்த பங்களிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ்வெங்கட், அனுராக் காஷ்யப் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, “‘விடுதலை பாகம் 2’ படத்தின் இயக்குநரின் கட் வடிவில் கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, படம் ஓடிடியில் கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்கும்” என்று வெற்றிமாறன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘விடுதலை’ முதல் பாகத்தில் மலைக் கிராமத்தில் சுரங்கம் தோண்டும் கார்ப்பரேட்களின் பின்னணியில் அரசியல், அதிகாரவர்க்கம் இருப்பதையும், தேடுதல் வேட்டை என்கிற பெயரில் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் அரச பயங்கரவாதத்தையும் காட்சிப்படுத்தியிருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் இதன் பின்னணியில் மக்கள் தலைவராக உயரும் விஜய் சேதுபதியின் கதை மொழிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும், இப்படம் வெற்றிமாறனின் தத்துவார்த்த அரசியலை ஆழமாகப் பேசுகிறது என்றும் பாராட்டு விமர்சனங்கள் வரிசைகட்டி வருவதும் கவனிக்கத்தக்கது.
