

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ‘சூர்யா45’ படத்துக்கான பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். ‘சூர்யா 45’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று (நவ.27) பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் வியாழக்கிழமை (நவ.28) முதல் தொடங்குகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா - த்ரிஷா ஜோடி ‘மெளனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’படங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.