

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதையடுத்து சில சமூக ஊடகங்களிலும் யூடியூப்பிலும் இவர்கள் பற்றி பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியானது.
“அவதூறு கருத்துகளைப் பரப்பும் வகையில் செய்தி, வீடியோ அல்லது சமூக வலைதளப் பதிவு என எதைப் பதிவிட்டிருந்தாலும், அதை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன். எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துகளைப் பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே அற்புதமான மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம். எதையும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சென்னை திரும்புவேன். அவர் பெயரை கெடுக்குமாறு அவதூறு பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.