

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள படம், ‘மிஸ் யூ’. ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7 மைல்ஸ் பர் செகண்ட் என்ற நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் வரும் 29-ல் படத்தை வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கார்த்தி வெளியிட, சித்தார்த் பெற்றுக்கொண்டார்.
கார்த்தி கூறும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. ‘கேட்சிங்’கான வார்த்தையை டைட்டிலாக வைத்துவிட்டார்கள். சோஷியல் மீடியாவில் பசங்க போடும் பதிவுகள் எல்லாம் காதலாகவே இருக்கின்றன. ஆனால் நாம் ஆக் ஷன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு விஜய் சார் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதைச் சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அதுபோன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. ‘பாய்ஸ்’ சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு வசதியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2-வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் சித்தார்த் செய்த விஷயங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்தன. நல்ல விஷயங்களைத் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது” என்றார்.