

“இயக்குநர் ஷங்கர் பார்வையில் என் கதையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜிடம் ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக் சுப்பராஜ், ”‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் என் பார்வை என்பது அல்ல. இயக்குநர் ஷங்கர் பார்வையில் என் கதையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
என் கதையை எப்படியெல்லாம் அவர் காட்சிப்படுத்தி இருப்பார் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர், ராம் சரண் படத்தில் என் பெயர் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் ஷங்கர் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவருடைய படத்தில் கதாசிரியராக என் பெயரைப் பார்ப்பது கனவு போல் இருக்கிறது. அப்படத்தைக் காண ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் திரையிடல் கோவா திரைப்பட விழாவில் நடைபெறுகிறது. இதற்காகவே கோவா சென்றுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூர்யா 44’ படத்தினை இயக்கியுள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள், இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.