விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தகவல் 

விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தகவல் 
Updated on
1 min read

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகினர். தொடர்ந்து, பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர். பின்னர், விவாகரத்து வழக்கின் தீர்ப்பை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பத்திரிக்கையாளர் உள்ளிட்டோர் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க படவில்லை. நீதிமன்ற அறையை மூடிய நிலையில் விசாரணையை நீதிபதி நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in